அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அல்-அமீன் பள்ளி எதிரே அண்மையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று மாற்றப்பட்டது. 17வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் இடம்பெற்றுள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாகவே பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, திலகர் தெரு போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது.
ஆனால், புதிய டிரான்ஸ்ஃபார்மர் வைத்த பிறகும் மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குடியிருப்புகள் மட்டுமின்றி ஏராளமான கடைகள், நிறுவனங்களை கொண்ட இப்பகுதியில் மின் தடை தொடர்வதால் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இப்பகுதியில் சுமார் 500 வாடிக்கையாளர்களை கொண்ட இணையதள இணைப்பு வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளதால், இங்கு ஏற்படும் மின் தடையால் அதிரை முழுவதும் 500 வீடுகளுக்கு இணையதள இணைப்பு தடைபடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதனால், வீடுகளில் இருந்து கணினியில் பணிபுரியும் (WORK FROM HOME) செய்யும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி வாசிகள். மின்வாரியத்துக்கு அப்பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் எழுதிய புகாரில் தெரிவித்துள்ளதாவது, "அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து மகிழங்கோட்டை செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள மின்மாற்றி அடிக்கடி பழுது ஏற்படுவதும் அதனை மின்சார ஊழியர்கள் சரி செய்வதுமாக உள்ளது.
ஒருநாள் பழுது ஏற்பட்டு ஆய்வு செய்த வகையில் மின்மாற்றியில் ஆயில் கசிவு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. சரி செய்யப்பட்ட நாட்களிலிருந்தே அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் 17வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.