உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் தற்போது சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது.
பாபர் மசூதி தடைக்கு பிறகு "அடுத்து" என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் கியான்வாபி மசூதியை சுட்டிக்காட்டினர். மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
விளம்பரம்:
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து குழு ஒன்றையும் அமைத்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இந்தஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர். இதனை அடுத்து 14 ஆம் தேதி மசூதியில் எதிர்ப்புகளை மீறி வீடியோ ஆய்வு தொடங்கியது.
இந்த ஆய்வுக்குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் என 36 பேர் ஆய்வுக்காக கியான்வாபி மசூதிக்கு சென்றனர். அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10:15 மணியளவில் வீடியோ ஆய்வு நிறைவடைந்தது.
இந்த ஆய்வில் அனைத்து தரப்பினரும் திருப்தி அடைந்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கௌசல் ராஜ் சர்மா தெரிவித்துள்ளார். இதனிடையே கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே ஆய்வுக்கு தடைகோரிய வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 ஐ மீறும் வகையிலா கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்கும் உத்தரவை கண்டித்து அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் நடைபெற இருக்கின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க SDPI கட்சி அழைத்துள்ளது.