ஆண்டுதோறும் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாளன்றும் அதற்கு முதல் நாளும் மின் தடை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மற்ற நாட்களில் வழக்கம்போல் இருக்கும் மின் விநியோகம் பெருநாள் தினங்களின்போது மட்டும் எப்படி தடைபடும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அதேபோல் கோடை காலம், பண்டிகை நாட்களில் வெளியூர்களில் இருந்து அதிகளவில் மக்கள் அதிரை வருகின்ற நேரத்தில் மின் தடை ஏற்படுவது வாடிக்கையானதாக உள்ளது. மரம் முறிந்து விழுந்துவிட்டது, அணில் கடித்துவிட்டது, மதுக்கூரில் வயர் துண்டிக்கப்பட்டுவிட்டது என வழக்கமாக கூறும் காரணங்களை தாண்டி, அதிகமாக சொல்லப்படுவது லோட் அதிகமாகிவிட்டது, ஏசி அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்.
குறிப்பாக நோன்பு பெருநாள் முதல் நாளில் அதிரையின் பல பகுதிகளில் நள்ளிரவு மின் தடை ஏற்பட்டு தூக்கத்தை கெடுத்தது. இதற்கும் ஓவர் லோட் முக்கிய காரணமாக கூறப்பட்டது. தற்போது வரை மின் தடை அவ்வப்போது ஏற்படுகிறது. இல்லாவிட்டால் குறைந்த வாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் எலெக்டிரானிக் பொருட்கள் பழுதடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நேரத்தில் இதுபோன்ற மின் தடை மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கி இருக்கிறது.
பல ஆண்டுகளாக இதை தரம் உயர்த்த பல முறை அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என வாக்குறுதி வழங்கிய விடியல் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டாகிவிட்டது. ஆனால், அதிராம்பட்டினத்துக்கு விடியல் கிடைக்கவில்லை. ஓவர் லோட், ஏசி பயன்பாடு அதிகம் என்று சொல்லி மக்கள் மீதே பழிபோடாமல் அதை தீர்க்க என்ன நடவடிக்கை எடுப்பது என்று சிந்தித்து செயல்படுவதே ஆட்சியாளர்களுக்கு அழகு.
அதைவிடுத்து குற்றம்சாட்டுபவர்களை எல்லாம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டுவதும் ஊடகங்களுக்கு தடை விதிப்பதும் இங்கு நடக்கிறது. இந்த வேகத்தை அதிராம்பட்டினம் மக்களின் மின் பிரச்சனையில் நகராட்சி நிர்வாகம் காட்டினால் எல்லோரும் பயனடைவார்கள்.