ஒரு காலத்தில் நோன்புமாதம் வந்துவிட்டால் அதன் முக்கிய அம்சம், சஹர் நேரத்தில் மக்களை எழுப்புவதற்காக தப்ஸ் அடித்துக்கொண்டு பாட்டுப்பாடிக்கொண்டு ஊர் முழுதும் சுற்றி வரும் பக்கிர்சாமார்கள்.
சரியான தெருவிளக்கு வசதிகள் இல்லாத காலமது. ஒருபச்சைப்போர்வை, தலைப்பாகைக்கட்டு, தோளில் ஒரு பை, கூடவே ஒரு அரிக்கன் லைட் இவைகள்தான் தப்ஸ் முழங்கி வரும் பக்கிர்சாமார்களின் காஸ்ட்யூம். விளக்கு ஏந்திவர சில நேரங்களில் ஒரு சிறுவனும் வருவதுண்டு .
விடிகாலை இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பயணம், சஹர் நேரம் முடிவதற்குள் பூர்த்தியாகும். தங்களுக்குள் தெருக்களையும் பிரித்துக்கொள்வார்கள் .
அதிரையைப் பொறுத்தவரை பெரிய தைக்கால் , சின்ன தைக்கால் என்று இரு தெருப்பகுதிகளில் பக்கிர்சாமார்கள் குடும்பத்துடன் வாழ்வார்கள் .
பெருநாள் நிறைவுற்றதும் வீட்டுக்குவீடு பக்கிர்சாமார்களுக்கு பெருநாள்படி என்று அரிசியும் பணமும் கொடுப்பார்கள். இடையில் ஜகாத்தும் தாராளமாக கொடுப்பார்கள் .
கடற்கரைத்தெரு, தரகர்தெரு பகுதிகளில் ஹஜ்பாய் என்பவர் சஹரில் பாட்டுப்பாடி வருவார் . நல்ல மரியாதையான மனிதர். பெருநாள் அன்று வரிசையாக அமர்ந்து தக்பீர் சொல்லிக்கொண்டிருக்கும்போது எல்லோருக்கும் கண்களில் சுர்மா தீட்டிவிடுவார் .
ஹஜ் பாய்க்குப்பிறகு அவரது மருமகன் சதக்கத்துல்லாஹ் என்பவர் அந்தப்பணிகளை செய்து வந்தார்.
வளைகுடாவின் வேலைவாய்ப்பு தாக்கங்கள் காரணமாக சமூக வாழ்க்கை அமைப்பும் மாறிப்போனதால் இன்று வரலாற்றின் சொச்சமாக நினைவுகளில் மட்டும் இவை தேங்கி நிற்கின்றன .
பெரிய தைக்காலும் சின்னத் தைக்காலும் தொழுகைப் பள்ளிகளாக கட்டப்பட்டு மாறியும் போய்விட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: இணைத்துள்ள படம் இந்த பதிவில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுடையது அல்ல. நாஞ்சில் கவிஞர் அன்பர் அபூஹஷிமா அவர்களுடைய பதிவிலிருந்து அனுமதி கேட்டு பதிவிட்டதாகும்.
- இப்ராஹிம் அன்சாரி, எழுத்தாளர்