புதிய தாலுக்கா: மதுக்கூரையும் சேர்த்து சொன்ன எம்.எல்.ஏ. அண்ணாதுரை... அதிராம்பட்டினம் என அடித்து சொன்ன அமைச்சர்

Editorial
0
சென்னை: அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்கா அறிவிக்க பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை பேசும்போது "பட்டுக்கோட்டை வட்டத்தை இரண்டாக பிரித்து மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி தர வேண்டும்." என கோரிக்கை வைத்தார்.

முத்துப்பேட்டை தாலுக்கா

இதேபோல் சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் முத்துப்பேட்டை தாலுக்காவாக செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதிரை மக்களின் கோரிக்கை

ஆனால், பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்கும் அதிராம்பட்டினத்தை தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்டத்தின் 2 நகராட்சிகளுல் ஒன்று அதிராம்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதி. என பல்வேறு சிறப்புகளை கொண்ட அதிராம்பட்டினம் தாலுக்காவாக அறிவிக்கப்படும் என்ற மக்கள் எதிர்பார்த்த நிலையில், எம்.எல்.ஏ. மதுக்கூரை தாலுக்காவாக அறிவிக்க கோரியது மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

என்ன நன்மை?

தாலுக்கா அலுவலகம் அமைந்தால், அதிரைக்கு அனைத்திலும் முன்னுரிமை கிடைக்கும். ஆவணங்களுக்காக பட்டுக்கோட்டைக்கு அலைய தேவையில்லை. தொழில் வளர்ச்சியடையும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி இருக்க, மக்களை வரிச்சுமையில் தள்ளும் வகையில் நகராட்சியாக அறிவித்துவிட்டு தாலுக்காவாக அறிவிக்காதது ஏன் என மக்கள் எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதிராம்பட்டினம் தாலுக்கா

இந்த நிலையில், எம்.எல்.ஏ.வின் கோரிக்கைக்கு நேற்று பதிலளித்த தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், "அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளின்படியின் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை அடிப்படையிலும் வருவாய் நிர்வாக ஆணையரிடம் கருத்துரு பெறப்பட்டு அதை அமைப்பது பற்றி பரீசீலிக்கப்படும்." என்றார்.

அதன் பின்னர் பேசிய எம்.எல்.ஏ. அண்ணாதுறை "மதுக்கூர் அல்லது அதிராம்பட்டினத்தை புதிய தாலுக்காவாக அமைக்க வேண்டும்." எனக்கோரினார்.

அடுத்து என்ன?

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், "பட்டுக்கோட்டையின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை ஆய்வு செய்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...