அதிரையில் தண்ணீர் குழாய் மூலம் இரட்டை இலையை வளர்க்க முயற்சி - மாறுவேடத்தில் வரும் அதிமுக

Editorial
0
அதிரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை பலரும் பல்வேறு யுக்திகளை வகுத்து தேர்தலை சந்திக்கின்றனர். அந்த வகையில் அதிமுகவின் தேர்தல் யுக்தி  வித்தியாசமானது. சாமர்த்தியமானதும் கூட..

கடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலும், 5 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளாலும், சி.ஏ.ஏ. சட்டத்துக்கு ஆதரவு அளித்ததாலும் அதிரையில் அதிமுகவுக்கான ஆதரவு கடுமையாக சரிந்து மக்களிடையே வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் தேசியளவிலான கூட்டணி தொடரும் என அக்கட்சி அறிவித்துள்ளதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது, அதிரையில் வார்டு பிரித்தல், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சர்ச்சை தொடர்பாக திமுக மீதும் மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதையு. தற்போது சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதிமுக அளவுக்கு அல்ல...

சரி விசயத்துக்கு வருவோம்... இப்படி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிமுக எப்படி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போகிறது என்ற சந்தேகம் பலரிடமும் இருந்து வந்தது. அது அதிமுகவினரிடமும் இருந்திருக்கும் என்பதையே அவர்களது தற்போதைய செயல்பாடுகள் காட்டுகின்றன... ஆம், கட்சியின் பெயரும் சின்னமும் டேமேஜ் ஆனதை உணர்ந்த அதிமுகவின் முக்கிய உள்ளூர் புள்ளிகள் அல்லது அவர்கள் வீட்டுப் பெண்கள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

இப்படி சுயேட்சையாக களம் காணும் அதிமுக புள்ளிகள் போட்டியிடும் சின்னம் தான் தண்ணீர் குழாய்... அதிமுகவுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களிக்காத மக்கள் தங்கள் முகத்துக்காக வாக்களிப்பார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை. குழாயிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் எப்படி செடிகளை வளர்க்குமோ அதேபோல் இந்த தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் நகராட்சித் தலைவருக்கான தேர்தலில் நிச்சயம் அதிமுக கட்சியை சேர்ந்தவரையே தேர்வு செய்வார்கள்.

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசியலில் அதே கட்சியில் பயணிப்பவர்கள், அந்த கட்சியின் சார்பாக அதே சின்னத்தில் போட்டியிடுவதில் என்ன தயக்கம்..? இப்படி மாறுவேடத்தில் வருவது மக்களை குழப்பாதா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

அதே நேரம் வேறு சில சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தண்ணீர் குழாய் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அதிரை 24 வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக சாராத சுயேட்சைக்கும் அந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நமதூரின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சி என்பது நாம் 19 ஆம் தேதி அளிக்கும் வாக்கில்தான் உள்ளது. எனவே தொலைநோக்கு பார்வையுடன் வேட்பாளர்கள் யார்? அவர்கள் பின்னணி என்ன? அவர்கள் இதுவரை செய்த சமூக பணிகள் என்ன? என்பதை அறிந்து உங்கள் பொந்னான வாக்குகளை செலுத்துங்கள்...

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...