அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரை நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி வார்டு மறுவரையறை நடந்திருப்பதாகவும் விடுமுறை நாளன்று, நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும் கூறி கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நகராட்சி அலுவககத்தை முற்றுகையிட்டு SDPI கட்சி போராட்டம் நடத்தியது.
இதற்கு முன்பு வார்டு வரையறை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் மெளனம் காத்துவிட்டு அவசர கதியில் திருச்சியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அப்போது குற்றம் சுமத்தினர்..
இந்த நிலையில், திருச்சியில் நடந்த மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற SDPI கட்சி அதிரை வார்டு மறுவரையறையில் குளறுபடி நடந்திருப்பதாக மனு வழங்கியது. இதில் SDPI கட்சியின் சார்பாக பேசிய வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி வார்டு வரையறையிலுள்ள குளறுபடிகளை பட்டியலிட்டதோடு புள்ளிவிவரங்களிலுள்ள முரண்பாடுகளையும் விளக்கி கூறி அவசர அவசரமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்துக் கேட்பு நிகழ்வில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் பங்கேற்ற அதிரை கிளை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மாஹிர், கருத்துக்களையும், கண்டனத்தையும் பதிவு செய்தார். கால அவகாசம் கொடுக்கவில்லை என்றும், கருத்துக் கேட்பு நிகழ்வை 120 கிமீ தூரம் வைத்தாகவும், ஒருதலைபட்சமாக ஒருசிலரிடம் மட்டும் கருத்து கேட்டு வார்டு வரையறை செய்ததாகவும், நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களின் வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்கவும், ஒரே குடும்ப வாக்குகள் வெவ்வேறு வார்டுகளில் சட்டவிரோதமாக (Delimitation act) பிரிக்கப்பட்டு இருப்பதாகவும், சில பகுதிகளில் போதிய உறுப்பினர் எண்ணிக்கை (Representation) இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அன்று அதிரை நகராட்சி ஆணையரிடம் 15 வது வார்டு வரையறையை மறு பரிசீலனை செய்யக்கோரி கீழத்தெரு முஹல்லா ஜமாத்தார்கள் முன்னிலையில் புகார் மனு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக
25 ஆம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களிடமும் கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட பகுதிகளில் அநீதமான முறையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து வரும் ஜனவரி 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.