அதிராம்பட்டினம் லாவண்யா மஹால் பின்புறம் உள்ள கிராணி மைதானம் அருகே மஸ்ஜித் இப்ராஹிம் என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று (ஏப்ரல் 2-ம் தேதி - 19 ஷஃபான் ஹிஜ்ரி 1442) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பள்ளிவாசல் வக்ப் செய்து திறப்புவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஜும்மா தொழுகையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பள்ளிவாசல் மஸ்ஜித் இப்ராஹிம் நிர்வாகி, சர்புத்தீன் நம்மிடம் தெரிவிக்கையில், "ஃபாத்திமா நகரில் மக்கள் அருகாமையில் ஜும்மா பள்ளிவாசல் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பள்ளிவாசல் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக முறையான அனுமதியை பெற்று ஜும்மா பள்ளியாக மஸ்ஜித் இப்ராஹிமை திறக்கிறோம்." என்றார்.