அபெக்ஸ் ஏடிசி நியூஸ் சேனல் என்ற நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தொலைக்காட்சி செய்தியை குறிப்பிட்ட நேரம் பார்த்தால் பணம் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வந்துள்ளன.
85 நாடுகளில் இருந்து 19 மொழிகளில் வெளியாகும் உலகச் செய்திகளை செயலி மூலம் பார்த்தால் 300 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என அந்த விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்காக 1,440 ரூபாய் முதல் 48,000 ரூபாய் வரை வைப்புத் தொகை செலுத்தினால், 20 மாதங்களில் 4 மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் அனுமதியுடன் இயங்குவதாகத் தெரிவித்துக் கொண்ட அந்த நிறுவனம், மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு மற்றும் டைமண்ட் என 6 வகையான திட்டங்களை அறிவித்து அதற்கான கட்டணத்தையும் தெரிவித்துள்ளது. மேலும் சங்கிலித் தொடர் வியாபார அடிப்படையில் புதிய நபர்களை சேர்த்து விட்டால் 20 சதவீதம் கமிஷன் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 50 பேர் வரை உறுப்பினராக இணைந்து சுமார் 100 கோடி வரை முதலீடு செய்தாக கூறப்படுகிறது. அதிரையிலும் பலர் இதில் இணைந்துள்ளனர். தொடக்கத்தில் இதற்கான பணம் வந்துகொண்டிருந்ததை பார்த்து அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் கமிஷனுக்காக மேலும் பலரை இவர்கள் இணைத்துள்ளனர். இவர்கள் வைக்கும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பார்த்து மேலும் பலர் இதில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் அபெக்ஸ் நிறுவனத்தின் செயலி செயலிழந்து விட்டது. அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் விசாரி்த்த போதுதான் தங்களைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிந்துகொண்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அந்த ஆப்பின் கமெண்ட் பகுதியிலும் தாங்கள் மோசடி செய்யப்பட்டு விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மோசடி குறித்து நமது அதிரை பிறையில் கடந்த ஏப்ரல் மாதமே நாம் எச்சரித்து இருந்தோம். அதை படித்த பிறகும் பணம் மேல் கொண்ட மோகத்தால் இப்படி மோசடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆன்லைன், வங்கி, பண மோசடிகள் பற்றி நாம் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவுகளை இங்கே இணைக்கிறோம். இவற்றை படித்து எப்படியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன என்பதை புரிந்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.