வெற்றிகரமாக 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிரை பிறை

Editorial
0
அதிரை பிறை கடந்த 2012ம் ஆண்டு ரமலான் மாதம் தொடங்கப்பட்டது. பெரிய தொழில்நுட்ப வசதிகள், குழு இன்றி மிகச்சாதாரணமாக தொடங்கிய இந்த தளம் அடுத்த ஓராண்டில் நமதூரின் முக்கிய இணையதளங்களுல் ஒன்றாக மாறியது. 

நாம் மேற்கொண்ட பல வித்தியாசமான முயற்சிகள், நீதியின் பக்கம் நின்று துணிச்சலாக செய்தி வழங்கியது, அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தியதால் அதிரை பிறை முன்னேறிச் சென்றது.

ஒரு கட்டத்தில் பல உண்மைகளை, ஊழல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்தி, சமூக பிரச்சனைகள், மக்கள் பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் போன்றவற்றை வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கைக்குறிய தளமாக மாறியது அதிரை பிறை
பிறை.

லிசன் பிறை என்ற பெயரில் முதன்முதலில் இணைய வழி பாட்காஸ்ட் (FM) சேனலை தொடங்கியது, டாக்டர் பிறை என்ற பெயரில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியது, அதிரை இணைய வரலாற்றில் முதன் முதலில் மக்கள் ஆட்சியாளரிடம் நேரலையில் கேள்வி கேட்கும் "நேருக்கு நேர்" நிகழ்ச்சியை நேரலையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டியது என நமது பணிகள் ஏராளம்.

இணையதள தரவரிசையை கணக்கிடும் அலெக்சா பட்டியலில் கடந்த 2016, 2017, 2018 ஆகிய 3 ஆண்டுகள் அதிரை இணையதள அளவில் முதலிடத்தில் இருந்து வந்தது அதிரை பிறை. இந்த சூழலில் தான் நமது செய்திகளை அதிரை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அதிரை பிறையை அடுத்தக்கட்டத்துக்கு தரன் உயர்த்த அதன் பெயரை நியூசு (newsu.in) என மாற்றம் செய்து தமிழ் பேசும் அனைத்து மக்களுக்குமான இணைதளமாக உருவாக்கினோம். அந்த தளமும் தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இதனால் கடந்த 2019-ம் ஆண்டு மற்றும் 2020 ரமலான் வரை அதிரை பிறை என்ற பெயரில் இணையதளம் செயல்படவில்லை. அதுவரை நமது செய்திகளை விரும்பி படித்துவந்த வாசகர்களுக்கு அது மனக்குறையாகவே இருந்து வந்தது. அதிரை மக்களோடு ஒன்றோடு ஒன்றாக இருந்த அதிரை பிறை இல்லாதது மக்களுக்கும், அதை நடத்தி வந்த குழுவுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 15 மாதங்கள் கடந்தாலும் நமதூர் மக்கள் அதிரை பிறையை மறக்கவில்லை. மீண்டும் அதிரை பிறையை தொடங்குமாறு வலியுறுத்தினர். 

அதற்கு இணங்க கடந்த ரமலான் தலைப்பிறையுடன் மீண்டும் அதிரை பிறையை adiraipirai.com என்ற இணைய முகவரியுடன் அறிமுகம் செய்தோம். எப்படி விடை கொடுத்தோமோ அதை விட வலுவாக களமிறங்க வேண்டும் என்ற முனைப்போடு பல புதிய கட்டுப்பாடுகளுடன், திட்டங்களுடன் தளத்தை தொடங்கினோம். பல இணையதளங்கள் பேசத் தயங்கிய முக்கிய விசயங்களை, ஊரின் பிரச்சனைகளை, சதித்திட்டங்களை அம்பலப்படுத்தி வந்தோம்.

சஹர் நேரத்தில் வெளியாகும் அதிரை பிறையின் கட்டுரைகளை படிக்கவே தனி வாசகர்கள் வட்டம் உருவானது. அந்த ரமலான் மாதம் முழுவதும் வெளியான அனைத்து கட்டுரைகளிலும் ஊருக்கு தேவையான பல முக்கிய விசயங்களை குறித்து விவாதித்து இருப்போம். பல சதிகளை அம்பலப்படுத்தி இருப்போம். அந்த மாதத்தின் அதிரையின் பல வாட்ஸ் அப் குழுமங்களில் நமது செய்திகள் விவாத பொருளாக இடம்பிடித்தன.

உடனுக்குடன்  அரைகுறையாக செய்திகளை வழங்காமல், குறைவாக வழங்கினாலும் நிறைவாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எது தேவையோ அதை மட்டுமே செய்தியாக வழங்கி வருகிறோம். அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், முஹல்லாக்கள் நடத்தக்கூடிய சிறிய சிறிய நிகழ்வுகளை கூட தவிர்த்துக் கொள்கிறோம்.

இதனால், அதிரை பிறையில் ஒரு செய்தி வந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தேவையற்ற செய்திகள் அதில் வராது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் என்றும் செயல்படுவோம்.

விரைவில் பல புதிய விசயங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். நடுநிலை ஊடகம் என்ற போலி பிம்பத்தை காட்டி விளம்பரம் செய்வது, தவறே செய்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக, பொதுப்புத்தியில் செய்திகளை வெளியிட நாம் விரும்பவில்லை. எவ்வளவு பேர் செய்தாலும், அது தவறு என்ற பட்சத்தில், அதை சுட்டிக்காட்டினால் மக்கள் மனம் மாறுவார்கள் என அறிந்தால் யார் எதிர்த்தாலும் நிச்சயம் அதை செய்தியாக்குவோம்.

இதற்காக பெரும்பான்மை மக்கள் நம்மை விமர்சித்தாலும் பிரச்சனை இல்லை. மக்களாகிய உங்களை ஏமாற்றாமல் யாராக இருந்தாலும் நீதியின் பக்கம் களமாக குரலற்றவர்களின் குரலாக இருக்க என்றென்றும் பாடுபடுவோம்.

அதிரை பிறை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவர்கள் கமெண்ட் பாக்சிலோ, அல்லது 8111038840 என்ற எண்ணுக்கோ வாட்ஸ் அப்பில் பகிரலாம். சிறந்த கருத்துக்கள் நாளை நமது தளத்தில் வெளியிடப்படும்.

நன்றி,
ஆசிரியர் குழு,
அதிரை பிறை.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...