அதிராம்பட்டினத்தில் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதே போல் மழை, புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.
இந்த காரணங்கள் அல்லாமல் நாள்தோறும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ரமலான் மாதம் முதல் அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடை அதிகரித்து உள்ளது. மின் தடைக்கான காரணம் பற்றி மின்வாரிய அதிகாரிகள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிப்பு செய்கிறார்கள்.
இன்று அதிரையில் 3:30 மணிக்கு மின்சாரம் முன் அறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை நகர் 110/33-11கிவோ துணை மின் நிலையத்தில் 110கிவோ மின் பாதையில் மின்னோட்டம் தடைபட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பின் மின்வாரியம் வெளியிட்டது. அதன் பின்னர் 5:30 மணி வரை மின் இணைப்பு வழங்கப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டு தற்போது 6 மணிக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளனர்.
அந்த அறிவிப்புகள் யாவும் மதுக்கூர், பட்டுக்கோட்டை அல்லது அதிரைக்கு வரும் லைனிலோ அல்லது கருவியிலோ பழுது ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் மாதந்தோறும் பழுது நீக்கத்துக்காக தடை செய்யப்படும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் கடந்த சனிக்கிழமை தான் முழுநாள் மின் தடை செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்களில் இந்த அளவுக்கு பழுது ஏற்படுகிறது என்றால் அது பழுது நீக்கம் செய்த ஊழியர்களின் தவறா அல்லது பழைய கருவிகளை இங்கு வந்து பொறுத்துகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெயில் காலத்தில் மக்கள் வீடுகளில் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மின் பழுதுகளை சீரமைத்து, பழுதடையாத வகையில் புதிய கருவிகளை பொறுத்தி தடையில்லா மின்சாரம் வழங்க அதிரை மின்சார வாரியம் முன்வர வேண்டும்.