கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில், தங்கள் கல்லாவை கட்ட ஆன்லைன் வகுப்புகள் மூலம் சுரண்டலை தனியார் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி இருக்கின்றன. இதை காட்டி பள்ளி இயங்குவதாக கூறி கட்டண வசூலிலும் தனியார் பள்ளிகள் ஈடுபட தொடங்கி உள்ளன.
படுமோசமான மொபைல் சிக்னலை கொண்ட அதிராம்பட்டினத்தில் இதற்காக வீட்டில் வைபை இணைப்பு வழங்க வேண்டி இருப்பதாகவும், அதற்கு தொடக்கத்தில் சில ஆயிரங்களும், மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வரை செலவாகுவதாகவும், ஊரடங்கால் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பலர் வேலை இழந்து உள்ளனர். வேலைக்கு செல்வோரிலும் பலருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நேரத்தில் போன் செய்து கல்விக்கட்டணம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்கிறார்கள் பெற்றோர்கள்.
இதுகுறித்து மேலும் சில பெற்றோர்கள் நம்மிடம் பேசுகையில், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதன் மூலம் பள்ளி கட்டிட பராமரிப்பு செலவு, பள்ளிக்கான மின்சார செலவு போன்றவை கிடையாது. வகுப்பு நேரமும் குறைவு. PET, நூலகம், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற வகுப்புகள் இருக்காது. ஆனால், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பள்ளிக்கட்டணத்தை பழைய கட்டணத்தையே நிர்வாகங்கள் கேட்பதாக பெற்றோர்கள் புலம்புகிறார்கள். தங்கள் நிலையை எடுத்துக்கூறியும், "10,000 ரூபாய் கூட கட்ட முடியாத நிலையிலா இருக்கீங்க, கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புக்கான ஐடி, பாஸ்வேர்டை தருவோம்" என போனில் பேசும் ஆசிரியர்கள் கூறுவதால் தாங்களும், பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர்.
இப்படி நிதிப்பிரச்சனை காரணமாக பெற்றோர்கள் ஒருபக்கம் பள்ளிகளுக்கு எதிராக போர்தூக்கும் அதே வேளையில், பணபலம் படைத்தவர்கள், தன் பிள்ளையின் படிப்பு போய்விடுமே என்று ஆதங்கப்படுவோர், கட்டிய ஃபீஸுக்கு கண்டதையும் கறந்துவிடமாட்டோமா என்று அலைவோர், பெத்த கடனுக்கு மொபைல் போனோடு போகட்டும், என்னை ஆளை விட்டால் சரி என்று எகிறுவோர், பள்ளி என்ன சொன்னாலும் தலையாட்டுவோர் , விஷயம் தெரிந்தும் நமக்கேன் வம்பு என்று மௌனம் காப்பவர்கள் என்று விதவிதமான பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அரசு, பள்ளிகள், பெற்றோர்கள் என மும்முனைத்தாக்குதலோடு இந்த ஆன்லைன் வகுப்புகளை வடிவமைத்துத் தரும் செயலி (App) நிறுவனங்களும் இதில் பெரிய லாபத்தைக்கொண்டாட, வரிந்துகட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. லாக்டவுன் 5.0 ல், மொபைல் விற்பனை அதிகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க தகவல். இப்படிப்பட்ட ஆன்லைன் வகுப்புகள் பிள்ளைகளின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். பல மணி நேர வகுப்புகள், சனிக்கிழமையானால் பரீட்சைகள், நர்சரி தாண்டாத வாண்டுகளுக்கும் மூன்று அரை மணி நேர வகுப்புகள் என இந்த மார்க் வாங்கும் இயந்திரங்களுக்கு வெள்ளையடிக்கும் வேலை களைகட்ட ஆரம்பித்திருக்கின்றன.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் (NIMHANS) இயக்குநர் கங்காதரன், ‘உலக சுகாதார மையத்தின் ஆதாரங்களைக் காட்டி குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்னணு காணொலிகளைப் பார்க்கக்கூடாதென்றும் ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப்பட வேண்டும்’ என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் தனஸ்ரீ ரத்ரா, ‘கண்களுக்கு அருகில் வைத்துப் பார்க்கப்படும் போன்கள் மற்றும் லேப்டாப்களினால் கிட்டப்பார்வை கோளாறுகளும், ஏற்கெனவே கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு பவர் அதிகரிக்கும் அபாயமும் உருவாகும்’ எனவும் எச்சரிக்கிறார்.
அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகம், ‘மொபைல் போன்களின் மூலமாக வெளியேறும் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புத்தசைகளில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பத்து மடங்கு பாதிப்புகள் உருவாகும் என்றும் இதனால் நாளடைவில் புற்றுநோய், மூளைக்கட்டி ஆகியவை வரக்கூடும் என்றும் கூறுகிறது.
இவை அனைத்தும் போக, அதிகப்படியான நேரத்தை மொபைல், கணினி மற்றும் தொலைக்காட்சி பார்க்க செலவிடும் குழந்தைகளுக்கு படைப்புத்திறன் குறைபாடு, பழகுவதில் உள்ள சிக்கல்கள், தூக்கமின்மை, கவனக்குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இதையெல்லாம் உணர்ந்து அதிரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நடந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி பிள்ளைகளின் நலனை காற்றில் பறக்கவிடாமல் தங்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.