திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கப்படும் பணி பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு தொடங்கி நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளான ஜூன் 1-ம் தேதி முதல் அதிரை வழியாக திருவாரூர் - காரைக்குடி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. விரைவில் சென்னைக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் அதிரை ரயில் நிலையத்தில் குடிமக்கள் நடமாட்டம் குறைந்து குடிகாரர்களின் (மன்னிக்கவும் மதுப்பிரியர்களின்) நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிரை பிறை செய்தியாளர் ரயில் நிலையம் சென்று பார்த்தபோது, பெயர் பலகையில் பெயிண்ட் கொட்டிப்போய் அதிராம்பட்டினமே அழிந்து கிடந்தது.
நம்ம ஊரில் அமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமேடையில் வெடிப்புகள், விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டப்பட்ட சில ஆண்டுகளில் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டு உள்ளதற்கு காரணம் பராமரிப்பு குறைபாடா அல்லது முறைகேடு நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
தடுப்புச்சுவருக்கு வெளியில் உள்ள புதர்கள் அகற்றப்படாமல் சுவற்றை தாண்டி கருவேல மரக்கிளைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலைய தன்ணீர் குழாய் வாஷ் பேசன்களில் குடிமகன்கள் பாக்கு போட்டு துப்பிய கரை படிந்து அசுத்தமாக காணப்பட்டது. ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்த நிலையிலும், முழுமையாகவும் கிடப்பதை பார்க்க முடிந்தது.
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையம் இந்த கதியில் இருந்தால் மக்களால் எப்படி வந்து செல்ல முடியும்?
மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளை செலவழித்து கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் முறையான பராமரிப்பு இன்றி பாழாகி குடிமகன்களின் கூடாராமாகி வருகிறது. இது குறித்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிமகன்கள் வருகையை தடுப்பதுடன், முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.