அதிரை வியாபாரிகளை மட்டும் வைத்து பால் விற்பனை சாத்தியமா..? நடைமுறை சிக்கல்கள் என்ன?

Editorial
1
பால்... உலகளவில் அனைத்து வயதினராலும், அனைத்து இன, மொழி, மத மக்களாலும் அருந்தப்படும் பானம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஆஸ்தான பானமாக இருப்பது பால் தான். பிறந்த உடன் மனிதனும், விலங்கம் முதலில் வயிறார அருந்துவது பாலை தான்.

இப்படி ஒரு UNIVERSAL பானமாக உள்ள பாலை கொரோனாவை காரணம் காட்டி ஊருக்குள் வந்து விநியோகிக்க வெளியூர் பால்காரர்கள் மறுத்தது தான் அதிரை மக்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து அதிரையை சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு சென்று பால் வாங்கி வந்து வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். ஊரடங்கிற்கு பிறகும் இவர்களிடமே பால் வாங்க வேண்டும், அதிரை இளைஞர்களின் பால் வியாபாரத்தை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முழுக்க முழுக்க அதிரை வியாபாரிகளை வைத்து ஊரில் தடையின்றி நிரந்தரமாக பால் விநியோகம் செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் அதிரையில், பால் வியாபாரம் செய்து வந்து தற்போது அதனை கைவிட்டுள்ள ஒரு சகோதரரிடம் அதிரை பிறை சார்பாக பேசினோம்.

அதிரை வியாபாரிகளிடம் மட்டுமே பால் வாங்க வேண்டும் என சொல்வது சாத்தியமா?
ஊருக்கு பால் கொண்டு வரும் வெளியூர் பால் வியாபாரிகளை பொருத்தவரை, தான் வளர்க்கும் மாடுகள், அண்டை வீடுகள், உறவினர் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளில் பால் கறந்து வந்து விற்கிறார்கள். இதற்காக அண்டை வீட்டார், உறவினர்களிடம் ஒரு லிட்டருக்கு சுமார் 18 ரூபாய் கொடுத்து தண்ணீர் கலக்காத பாலை வாங்குகின்றனர். பிறகு அதில் தண்ணீர் கலந்து ஊரில் லிட்டருக்கு சுமார் ரூ.30 க்கு விற்கிறார்கள்.

இதேபோல் வீடுகளில் பால் ஊற்றாதவர்கள் தங்கள் மாடுகளில் பால் கறந்து சொசைட்டியில் சுமார் ரூ.25-க்கு விற்கிறார்கள். அதை பெற்றுக் கொள்ளும் சொசைட்டி நமதூரில் பால் வியாபாரம் செய்யும் இளைஞர்களிடம் ரூ.38-க்கு விற்கிறது. அதிரை அருகே காசாங்காடு, துவரங்குறிச்சி, பட்டுக்கோட்டையில் சொசைட்டி உள்ளது. அங்கு சென்று தான் நமதூர் வியாபாரிகள் பால் வாங்கி வந்து வீடுகளில் தண்ணீர் கலக்காத திடமான பாலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்கிறார்கள். ஆனால், சொசைட்டியில் குறிப்பிட்ட அளவு தான் பால் வாங்க முடியும். ஆவின் பால் தேவை போகவே சொசைட்டியில் வியாபாரிகளுக்கு பால் தருவார்கள்.

பாலின் மூல விலை, அதை வாங்க சொசைட்டிக்கு செல்லும் போக்குவரத்து செலவு, வீடுகளில் விநியோகிப்பதற்கு ஆகும் போக்குவரத்து செலவு, பாக்கெட் போடும் செலவை சேர்த்தால் பாலை அதிக விலைக்கு தான் விற்க முடியும். அப்படி விற்றாலும் உள்ளூர் பால் வியாபாரிகளால் இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது கடினம்.

அதேபோல், நமதூர் மக்களால் அதிக விலை கொடுத்து நீண்ட நாட்களுக்கு இப்படி பாலை வாங்க முடியாது. அனைத்து வகையான பொருளாதார சூழலுக்கும் உட்பட்ட மக்கள் நமது பகுதியில் வசிக்கின்றனர். பட்ஜெட்டில் பிரச்சனை வந்தால் அவர்கள் பழையபடி குறைந்த விலை பாலை தான் எதிர்பார்ப்பார்கள். 

இந்த சிக்கல்களில் இருந்து தீர்வு காண வழி உள்ளதா?
இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பால் விலையை குறைத்தால் மட்டுமே முடியும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கு உள்ளூர் பால்காரர்கள், பொதுமக்கள், முஹல்லாக்கள் ஒருங்கிணைந்து இதில் செயல்பட வேண்டும். 

உள்ளூரில் வீடு வீடாக பால் விற்கும் வெளியூர் வியாபாரிகளிடம் பேசி அவர்களை ஊர் எல்லைக்கு வர வைத்து தண்ணீர் கலக்காத லிட்டர் பாலை ரூ.30-க்கு மொத்தமாக வாங்கலாம். இதன் மூலம் வெளியூர் வியாபாரிகளுக்கும் வீடு வீடாக சென்று பால் விநியோகிக்கும் போக்குவரத்து செலவு மிச்சமாகும். நமதூர் வியாபாரிகளுக்கும் ரூ.8 மிச்சம். அதுபோக சொசைட்டிக்கு செல்லும் போக்குவரத்து செலவு குறையும். அதே போல் உள்ளூரில் பால் வியாபாரம் செய்யும் அதிரை வியாபாரிகளை ஒன்றிணைத்து அவரவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தெருக்களை சமமாக ஒதுக்கி மக்களின் ஒத்துழைப்புடன் பால் விநியோகிக்க வைக்கலாம். 

குறிப்பிட்ட தெருக்களுக்கு மட்டும் விநியோகிப்பதால் வீடுகளுக்கு பால் கொண்டு செல்ல தேவையான போக்குவரத்து செலவு குறையும். டின்னில் பாலை அடைத்து சைக்கிளில் வைத்து கூட பாக்கெட் போடாமல் வீடு வீடாக பாலை விநியோகிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் மக்களுக்கு ரூ.38 முதல் ரூ.40-க்கு தண்ணீர் கலக்காத பாலை விற்பனை செய்ய முடியும். குறைந்த விலைக்கு தண்ணீர் கலக்காத பால் கிடைத்தால் மக்களும் வெளியூர் வியாபாரிகளை நாட மாட்டார்கள்.

தனியாக பால் பண்ணை வைத்து நடத்தினால் பிரச்சனை தீருமா?
அது மிக எளிதில் நடந்துவிடக்கூடிய ஒன்றல்ல. நம் நாட்டில் பசுக்கள், அதற்கான தீவனங்கள், இதர உபகரணங்களுக்கான விலை மிகவும் அதிகம். பசுக்களை பராமரிப்பதும் மிகக்கடினம். அதற்கான செலவும் அதிகம். வெயில் காலங்களில் இது மேலும் சிக்கலாக முடியும். இந்தியாவில் பால் பண்ணை தொழில் என்பது பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமதூரை சுற்றிலும் பெரிய அளவிலான பால் பண்ணைகள் கிடையாது. வீடுகளில் 2, 3 மாடுகள் வளர்த்து அதில் பால் கறந்து சொசைட்டியில் விற்கும் மக்களால் தான் நாட்டின் பால் தேவையே பெரும் அளவில் பூர்த்தி அடைகிறது. அதிராம்பட்டினம் போன்ற அதிக பால் தேவை உள்ள பகுதியில் சுற்று வட்டார கிராம மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கூறியவாறு பால் வியாபாரிகளை ஒருங்கிணைத்து தெருக்களை பிரித்து வேண்டுமானால் பால் விற்க முடியும்.

இதுகுறித்து முடிவுகள் எடுக்கும் முஹல்லாக்களுக்கு உங்கள் வேண்டுகோள் என்ன?
மக்களின் அத்தியாவசிய பொருளான இந்த பால் விசயத்தில் உணர்ச்சி வசப்பட்டு  முடிவுகளை எடுப்பதை விட, உள்ளூர் பால் வியாபாரிகளை அழைத்து அவர்களிடம் ஆலோசனை பெற்று மேல்சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் அதிரையை சேர்ந்த பலருக்கு பால் வியாபாரம் நிரத்தர லாபம் தரும் வாழ்வாதாரமாக மாறும். மக்களுக்கும் தண்ணீர் கலக்காத சத்தான பால் கிடைக்கும்" என்றார்.

Post a Comment

1Comments
  1. This is the high time to establish on behalf of SIS an independent, self sufficient (with our own own workforce) and non profit cooperative society for Milk, Milk products and manure processing unit to encourage local employment opportunities for our people and assuring hygienic and interrupted supply of essential commodities such as milk, vegetables & fruits and other products

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...