நமதூரில் பெரும்பாலான மாணவிகள் 12ம் வகுப்பு வரையிலும் படிக்கிறார்கள். சிலர் அதையும் கடந்து பொறியியல், கலை & அறிவியல் பிரிவுகளில் பட்டப்படிப்புகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு படிக்கும் பெண்களில் துறை சார்ந்த பணிக்கு செல்பவர்கள் மிகவும் குறைவானவர்களாக உள்ளார்கள். பெரும்பாலானோர் படித்தவுடன் எந்த பணிக்கும் செல்லாமல் திருமணம் முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் படித்த கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுப்பதை கடந்து வேறு எதற்கும் பயன்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
எனவே உயர்கல்விக்கு செல்லும் பெண்கள் பணிக்கு பயன்படாவிட்டாலும், வாழ்க்கைக்கு பயன்படும் கல்வியை படித்தால் ஆயுள் வரை பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், நர்சிங் படிப்புகளை நமதூர் பெண்கள் உயர்கல்வியில் தேர்ந்தெடுத்து படிக்கலாம். கொரோனா பீதியால் வெளியூர்களை சேர்ந்த செவிலியர்கள் அதிரைக்கு வராமல் இருந்தது நினைவிருக்கும். நமதூர் பெண்கள் நர்சிங் படிப்பதன் மூலம் இதுபோன்ற இக்கட்டான நிலையில் உதவி செய்ய முடியும்.
ஷிபா போன்ற நமதூர் ஸ்தாபனங்களில் மார்க்க வரையரைக்கு உட்பட்டு உள்ளூர் செவிலியர்கள் பணியாற்றுவதன் மூலம் நமதூர் பெண்களின், கர்ப்பிணிகளின் தேவை உணர்ந்து அவர்களுக்கான மருத்துவ உதவிகளை அளிக்கலாம். நர்சிங் படித்துவிட்டு பணிக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு மருத்துவ உதவி, முதலுதவி வழங்கும் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம்.
வீட்டில் உள்ள வயதான சர்க்கரை நோயாளிகள், இரத்த கொதிப்பு, கொலெஸ்ட்ரால், ஆஸ்துமா நோயாளிகளை எப்படி பராமரிப்பது? அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை வழங்குவது என்பது பல பெண்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரை கண்காணிக்க ஓராளவு மருத்துவ அறிவு அவசியம். நமது வீட்டில் செவிலியர் இருந்தால் இந்த சிக்கல் இருக்காது.
அதே போல், மருத்துவமனைகள் எளிய நோயாளிகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதும் அதிகரித்து வருகிறது. நமது பெண்கள் நர்சிங் படிப்பதன் மூலம் விழிப்புணர்வுடன் தனியார் மருத்துவமனைகளை அணுகலாம். அந்த காலத்தில் ஒருவர் இறந்துவிட்டால் வீட்டில் உள்ள முதியவர்கள் நாடி பார்த்து சொல்லிவிடுவார்கள். ஆனால், இக்காலத்தில் அத்தகையோர் எண்ணிக்கை மிகக்குறைவு.
ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிபடுத்த மருத்துவர்களை தேடி அழைத்துவரும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நமதூரில் எதிர்காலத்தில் வீட்டுக்கு ஒரு செவிலியரை உருவாக்கினால் பெரிய அளவில் பலன் கிடைக்கும். யூடியூப், கூகுளை பார்த்து தவறாக மருத்துவ முறைகளை பின்பற்றும் நபர்கள் அதிகரித்துவரும் இக்காலத்தில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு சுகாதார ரீதியிலான ஆலோசனைகளை வழங்க செவிலியர்கள் தேவை அவசியம்.
ஆனால், நமதூரில் நர்சிங் படிப்பதற்கான கல்வி நிறுவனங்கள் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று. நமதூர் மக்கள் இதன் தேவையை உணர்ந்து காதிர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினாலோ, கல்லூரி நிர்வாகமே ஊர் நலன் கருதி இதை கொண்டு வர முயற்சித்தாலோ எதிர்காலத்தில் இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
நர்சிங் படிப்பை கொண்டு வர தாமதம் ஆனால், தற்காலிகமாக நர்சிங் படிப்புக்கான டிப்ளமோ வகுப்புகளை தொடங்கலாம். இதனை காதிர் முகைதீன் கல்லூரி நிர்வாகமோ அல்லது வேறு கல்வி நிறுவனங்களோ டிப்ளமோ பயிற்சி வழங்கலாம். அதற்கு முன் 11, 12-ம் வகுப்புகளில் ஆப்ஷனல் பாடமாக இருக்கும் நர்சிங்கை அதிரை உயர்நிலைப் பள்ளிகளில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பணிகளுக்கு செல்லாத பெண்கள் கம்பியூட்டர், அக்கவுண்ட்ஸ், போன்ற பாடங்களை தேர்வு செய்வதை விட 11, 12-ம் வகுப்புகளில் நர்சிங்கை படிப்பதன் மூலம் பள்ளி படிப்பிலேயே செவிலியர்களுக்கான அடிப்படை தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். 11 ஆம் வகுப்பில் ஜெனரல் நர்சிங், நியூட்ரிசியன் அண்ட் டயடிக்ஸ், மைக்ரோ பயாலஜி போன்ற பாடங்கள் உள்ளன.
அதிரையின் எதிர்கால தேவையை உணர்ந்து உள்ளூர் கல்வியாளர்கள், கல்வி நிறுவனஙகள், மருத்துவர்கள், முஹல்லாக்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
அதே போல் ஆண் செவிலியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் உள்ளது. வேலை வாய்ப்பும் அவர்களுக்கு பிரகாசமாக உள்ளது. எனவே ஆண்களும் இதனை பெண்களுக்கான படிப்பு என ஒதுக்கிவிடாமல் இது ஒரு வாழ்க்கை கல்வி என்பதை உணர்ந்து அடுத்தக்கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி.
இந்த கட்டுரை வாசித்த தங்களில் பலருக்கு இது பெண்களுக்கு ஹலாலான பணியா, இதை படிக்கலாமா என்ற சந்தேகம் வரும். அத்தகையோர் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் இருந்த இஸ்லாத்தின் முதல் செவிலியரான ருஃபைதா பிந்த் ஸஅத் அவர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அதனை பின் இணைப்பாக வழங்குகிறோம்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ருஃபைதா, பனி அஸ்லாம் குலத்தை சேர்ந்தவர். போர்க்களத்தில் காயமடைந்த சஹாபாக்களுக்கு சிகிச்சையளிக்க நபிகள் நாயகத்திடம் அனுமதி பெற்று இயங்கியவர். மதினாவின் மஸ்ஜிதுன் நபவிக்கு மிக அருகில் கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கும் தேவையுடையோருக்கும் உதவுமாறு அனுமதி அளிக்கப்பட்டிருந்தார்.
ருஃபைதா அவர்கள் சவூதியின் மேற்கு பகுதியான ஹிஜாஸில் ஹிஜ்ரி 2ல் பிறந்ததாக (கிபி 620) தோராயமாக அறியப்படுகிறது. தமது தந்தையான ஸ'ஆத் அல் அஸ்லாமி அவர்களிடம் மருத்துவம் பயின்ற ருஃபைதா முதல் முஸ்லிம் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் அறியப்படுகிறார். ருஃபைதா ஒரு செவிலி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மாத்திரமல்லாது சிறந்த சமூக சேவகியாகவும், சமூகத்தில் சூழ்ந்திருந்த நோய்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும், அனாதை குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றினை தொடங்கி ஆதரவற்றவர் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.
தம்மை போல பல விருப்பமுடைய அன்சாரி பெண்களுக்கு செவிலிப்பணிக்கான பயிற்சிகள் அளித்து பட்டறை ஒன்றும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த செவிலியாக ருஃபைதா அவர்கள் கடைபிடித்த ஒழுங்குமுறைகள் தான் பின்னாளில் மத்தியகால இஸ்லாமிய பேரரசுகள் நிர்மாணித்த மருத்துவமனைகளிலும் , பிறகு ஐரோப்பாவிலும் நர்ஸிங் என பரவியது. நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்திலேயே அவர்களோடு வாழ்ந்த செவிலி ருஃபைதா தான் இஸ்லாமிய உலகின் முதல் செவிலியாக அறியப்படுகிறார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அதிரை பிறை சகோதரர்களுக்கு என் கனிவான வேண்டுகோள் உங்கள் பதிவுகளும் யாவும் படிப்பதற்கு என் போன்றவர்களுக்கு சற்று சிரமமாக உள்ளது லெட்டர்ஸ் சிறியதாக இருப்பதால் சற்று பெரிதாக பதிவிடவும் அல்லது நாங்கள் பெரிதாகப் ஆக்கி படிக்கும் அளவிற்கு பதிவிடவும்
ReplyDeleteGood message...வாழ்த்துக்கள்
ReplyDelete