இப்படி பெருவாரியாக இணையதள சேவையை பயன்படுத்தும் நமதூரில் ஜியோ வருகைக்கு பிறகு, அதில் அறிவிக்கப்பட்ட அதிரடி ஆஃபர்களை கண்டு பழைய எண்களை புறம்தள்ளிவிட்டு அனைவரும் ஜியோவுக்கு மாறினர். தொடக்கத்தில் ஜியோ வழங்கிய அதிவேக இணையதள சேவையால் பெரும்பாலான வீடுகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த வை-பை, பைபர் ஆப்டிக் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மொபைலில் உள்ள ஹாட்ஸ்பாட் வசதி மூலமே கணினிகளிலும் இணைய சேவையை பயன்படுத்தினர்.
அந்த அளவுக்கு அதிகவேகமாக இணைய சேவையை அளித்துவந்த ஜியோ, தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. கஜா புயலுக்கு பிறகு ஏற்பட்ட கடும் சேதம் காரணமாக மொபைல் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகளை செய்து மொபைல் சிக்னலை சரி செய்தாலும் இணைய வேகம் 2ஜி ரகத்திலேயே இருப்பதாக அதிரை மக்கள் புலம்புகிறார்கள். மெயின் ரோட்டுக்கு மேற்கே உள்ள சி.எம்.பி. லேன், புதுமனைத் தெரு, கள்ளுக்கொள்ளை, மேலத்தெரு, கீழத்தெரு, நெசவுத் தெரு போன்ற பகுதிகளில் கூகுள் பக்கம் திறக்க கூட சிரமப்படுகிறார்கள் மக்கள். வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேச பெரும்பாலும் IMO, வாட்ஸ் அப் கால், BOITM போன்ற சமூக வலைதள சேவை பயன்படுத்தப்படுகின்றன. இவர்களும் இந்த மோசமான இணைய வேகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களும் முழு சிக்னலுமே கிடைக்காமல் போய்விடுவதால், அவசர நேரத்தில் போன் கூட செய்யமுடியாத நிலைக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இதுகுறித்து அதிரை வட்டாரத்துக்கான ஜியோ முகவர்கள் மண்டல அதிகாரிகளிடம் இந்த சிக்கலை எடுத்துறைத்து அத்தியாவசிய தேவையான இணைய சேவையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜியோ பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.