வாரத்தில் உள்ள 6 நாட்கள் வண்ண அட்டைகளை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வண்ண அட்டைக்கும் ஞாயிறு அன்று வெளியே வர அனுமதி இல்லை என்பதால் கடைகள் அடைக்கப்படுவது வழக்கமான ஒன்று. எனவே இது முழு ஊரடங்காக கருதப்படுகிறது. இதை மக்களுக்கு ஒரு நினைவூட்டலுக்காக ஆட்சியரகமும், பேரூராட்சியும் அறிவிக்கின்றன. அதை ஒரு நினைவூட்டல் பதிவாக வெளியிட்டு கடந்து போகலாம். ஆனால், புதிய செய்தி போன்றும், ப்ரேக்கிங் செய்திகளை போன்றும் வெளியிட்டு மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துவது தவறு.
அதிராம்பட்டினத்தில் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் குறைந்துவிட்டது. மீதம் உள்ளவர்களும் ஓரிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள் என தகவல் தெரிவிக்கிறது. இந்த சூழலில் அதிராம்பட்டினத்தில் மட்டுமே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை போல் மிகைப்படுத்துவது, நமதூரில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது என்ற பிம்பத்தை சுற்றுவட்டார கிராம மக்களுக்கு காட்ட வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் இதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
அதே சமயத்தில் 2 வாரங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வண்ண அட்டை முறையை இன்னும் தொடர வேண்டுமா என்பதை ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் தினக்கூலிகள் பலரால் 2 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க முடியாது. அத்தகையோர் இதுபோன்ற முழு நாள் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவார்கள். எனவே வேறு சில கட்டுப்பாடுகளுடன் இந்த ஞாயிறு ஊரடங்கை தளர்த்தலாம்.