அதிரையில் விற்பனை செய்யப்படும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கான காரணம் குறித்து அவர்கள் அதிரை பிறையிடம் வினவினர்.
நாம் இதுகுறித்து அதிரையை சேர்ந்த ஒரு பழ வியாபாரியிடமும், ஈரோட்டில் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு பழ வியாபாரியிடமும் விசாரித்தோம். இருவர் கூறியதும் ஏறக்குறைய ஒரே காரணம் தான்.
அவர்கள் கூறியதாவது, "கொரோனா ஊரடங்கு காரணமாக வட மாநில போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. திடீர் ஊரடங்கால் பிற மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கண்டெய்னரில் இருந்த பழங்கள் கெட்டுப்போய்விட்டன. அதில் அதிகளவில் ஆப்பிள் பழங்கள் அழுகிவிட்டன. அதே போல், பிற மாவட்டங்களில் இருந்து வரும் பழங்களை ஏற்றி வரும் லாரிகளும் ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் நிறுத்தப்பட்டு போலீசார் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால் பழங்கள் பல மணி நேரம் கண்டெய்னருக்குள் இருந்து அழுகிவிடுகின்றன. அதே கொரோனா பீதியால் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், மூட்டை இறக்கும் மார்க்கெட் தொழிலாளர்கள் அதிகம் பணிக்கு வருவதில்லை. எனவே அதிக கூலியை கொடுத்து ஓட்டுநர், தொழிலாளர்களை பணிக்கு அழைத்துவர வேண்டியுள்ளது. எனவே இந்த நஷ்டக்கணக்கையும் விற்பனை செய்யும் பழத்தில் சேர்த்து மொத்த வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இது தான் விலை உயர்வுக்கு காரணம். விலை உயர்ந்தாலும் உள்ளூரில் வணிகம் சிறிய பழக்கடை வைத்திருக்கும் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை" என்கின்றனர்.
இப்படி பழங்கள் விலை அதிகரித்து உள்ளதால் ரமலான் மாதத்தில் இப்தாருக்காக உடல் குளிர்ச்சிக்காக பழங்கள் வாங்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஊரடங்கால் போதிய வருவாய் இன்றி தவிக்கும் மக்களுக்கு இவை எட்டாக் கனியாகிவிட்டது எனலாம்.