அதிரையர்களே! இதை செய்யாதீர்கள் என பரவும் 2 தகவல்கள்... பகிரும் முன் சிந்திப்போம்

Editorial
0
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பரவிய கொரோனாவை டெல்லி சென்று வந்தவர்களால் மட்டுமே பரவியது என குற்றம்சாட்டி இஸ்லாமியர்கள் மீது அரசும், ஊடகங்களும் களங்கம் கற்பித்தன. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் பல்வேறு வகைகளில் தங்களுக்கு இடையே கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவாமல் தடுக்க முயன்று வருகின்றார்கள். அதே போல் கொரோனா பாதிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை என்பதையும் நிரூபிக்க போராடி வருவதை அறிய முடிகிறது.  இந்த சூழலில் அதிரையின் வாட்ஸ் அப் குழுக்களில் 2 தகவல்கள் வைரலாகி வருகின்றன. 

முதல் வைரல்: 

வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகும் ஆடியோ ஒன்றில் பேசும் நபர் "பெருநாள் நெருங்கும் போது மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. துணிக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கலாம். உடனே பெருநாளுக்கான புத்தாடைகளை வாங்க வெளியூர்களுக்கு சென்றுவிடாதீர்கள். 

மீண்டும் மாவட்டங்களில் கொரோனா பரவினால், பெருநாளுக்கு ஆடைகள் வாங்க குவிந்த முஸ்லிம்களால் தான் கொரோனா பரவியது என காரணம் சொல்லி மீண்டும் சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பார்கள் எனக் கூறி இருப்பார்."

இதுபோல் நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதால் நாமும் ஒரு கூடுதல் தகவலுடன் சேர்த்து அதிரை பிறையில் சில நாட்களுக்கு முன்பு இதை பதிவிட்டோம். அதாவது, "கடந்த 2 மாதங்களாக கடையை திறக்காமல் வருமானம் இன்றி தவிக்கும் உள்ளுர் வியாபாரிகளிடம் ஆடைகளை வாங்குவோம்.  அங்கும் மக்கள் கூட்டம் திரளாமல் டோக்கன் சிஸ்டம் மூலம் கடைக்காரர்கள் பொருட்களை விற்கலாம்.  உள்ளூர் வியாபாரிகளும் தங்களுக்கு கிடைத்த வருமானம் மூலம் மகிழ்ச்சியுடன் பெருநாளை கொண்டாடுவார்கள்." என நாம் கூறி இருந்தோம்.

பெருநாளுக்கு புத்தாடை வாங்காதீர்கள் என்று மட்டும் சொல்வது ஏற்கனவே வருமானம் இன்றி தவிக்கும் அதிரை ஜவுளிக்கடை வியாபாரிகளை மேலும் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம் என்ற தகவலையும் சேர்த்து பகிர்தல் நலம்.

வைரல் 2:

"கொரானாவின் தலைநகரம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சென்னையில் இருந்து நம் ஊருக்கு மக்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து பெருநாள் கொண்டாட ஊர் வருவது நல்லதா? என்று நம் சமுதாய மக்கள் உணர வேண்டும்."

இதுவும் ஒரு எச்சரிக்கை பதிவு தான். ஆனால், இதை 2 விதமாக பார்க்க வேண்டும். பொதுப்படையாக அனைவரும் பெருநாள் கொண்டாட வருகிறார்கள் என்று கூறிவிட முடியாது. சென்னையில் வீடு எடுத்து குடும்பத்துடன் இருப்பவர்கள் ஊருக்கு பெருநாள் கொண்டாடவோ அல்லது கொரோனா அச்சத்தின் காரணமாகவோ வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் இந்த கருத்து பொருத்தமானதாக இருக்கும். 

ஆனால், சென்னையில் பேச்சுலர் ரூமில் தங்கி உணவகத்தை நம்பி இருக்கும் இளைஞர்கள் நிலை வேறு. வீட்டிலோ அல்லது மேன்சன் பேச்சுலர் அறைகளிலோ தனியாக தங்கி இருக்கும் அதிரை இளைஞர்களுக்கு சஹர், இஃப்தார் உணவு கிடைப்பதில் கூட சிரமம் இருக்கிறது. மண்ணடி போன்ற பகுதிகளில் கூட ஓரளவு ஏற்பாடு செய்துவிடலாம். ஆனால், வேறு ஏரியாக்களில் தங்கி இருக்கும் இளைஞர்கள் நிலை இன்னும் மோசம்.

முறையான சஹர் இஃப்தார் உணவு இன்றி கால் வயிற்றை நிரப்பி நோன்பு நோற்போர் பலர் உள்ளனர். இதுவும் எவ்வளவு நாட்களுக்கு எனத் தெரியவில்லை. சென்னை புறநகரின் ஓரிரு இடங்களில் தான் சஹர் ஏற்பாடு செய்யப்படுகிறது. கோயம்பேட்டில் கொரோனா பரவியதால் காய்கறி தட்டுப்பாடும் மிகப்பெரிய அளவில் ஏற்பட இருக்கிறது. இந்த சூழலில் மிகப்பெரிய உணவுத் தட்டுப்பாடை அங்குள்ள மக்களே சந்திக்க இருக்கும் சூழலில் உணவகங்களை நம்பி இருக்கும் இளைஞர்கள் நிலையை யாராவது சிந்தித்தோமா..?

பல மேன்சன்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. தங்கி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களின் நிலை என்ன? உணவும், இருப்பிடமும் இன்றி இவர்களால் கொரோனா பரவும் சென்னையில் எப்படி இருக்க முடியும்? இந்த நிலை உணர்ந்து தான் தங்களால் அதை சமாளிக்க முடியாது என்ற நிலை, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வாகன வசதிகளை அரசு ஏற்பாடு செய்து அவர்களுக்கென தனி அனுமதிச்சீட்டு முறையையும் அறிமுகம் செய்கிறது. இந்த சூழலில் நாம் சுயக்கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களின் இந்நிலை அறியாமல் பொது மனப்பான்மையில் செய்திகளை பகிர்வது சரியா என்பதை சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர்களை அனுமதிக்காவிட்டால் டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் நிலை நாளை இவர்களுக்கும் ஏற்படலாம். எனவே சென்னையில் இருந்து வருபவர்களை உடனே கொரோனா சோதனைக்கு உட்படுத்தி பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தலாம். அதை விடுத்து நாம் இதுபோன்ற தகவல்களை பகிர்வதன் மூலம் ஏற்கனவே சென்னையில் துயரத்தில் இருக்கும் நமது சகோதரர்களை அறிவுறுத்தல் என்ற பெயரில் மனதளவில் காயப்படுத்தி தாழ்வு மனப்பான்மைக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

டெல்லி விவகாரத்துக்கு பிறகு நம்மிடையே எழுந்துள்ள ஒரு பாதுகாப்பின்மை, தாழ்வு மனப்பான்மை காரணமாக இதுபோன்ற முடிவுகளை எடுப்பது இயல்பு என்றாலும், அதன் மற்றொரு முகத்தையும் நாம் பார்க்க கடமைபட்டுள்ளோம். எனவே வாட்ஸ் அப்பில் ஒரு சிலர் இதுபோல் ஒரு கருத்தை சமுதாய நலன் கருதி சொல்லும்போது அதில் உள்ள நிறை, குறைகளை ஆலோசித்து, அந்த கருத்தால் வேறு யாராவது பாதிக்கப்படுவார்களா என்பதை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து பகிர்தல் நலமானது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...