அதிராம்பட்டினத்தில் உள்ள முஹல்லாக்கள், அரசியல் கட்சிகளை விட NGO-க்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பண்ணாட்டு NGO-கள் தொடங்கி குட்டி குட்டி NGO-க்கள் முளைத்து வருகின்றன. NGO என்றால் NON GOVERNMENTAL ORGANISATION (அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம்) எனப்பொருள். ஊரில் நல்லவர் போல் மக்கள் நலன் என்ற பெயரில் அந்த சேவை இந்த சேவை என விளம்பரத்துக்காக செய்து வரும் பன்னாட்டு NGO-க்களான லயன்ஸ், ரெட் கிராஸ், ரோட்டரி சங்கங்கள், இதர குட்டி குட்டி NGOக்கள் மக்களுக்கு எதிராக அரசு, கார்ப்பரேட்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதா?
மக்கள் மத்தியில் ஹீரோயிச தோற்றத்தை உருவாக்கி வரும் போலி சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற NGO-களில் உள்ளனர். NGO செயல்பாடுகளை மெச்சுவதை, உச்சிமுகர்வதை நிறுத்திவிட்டு அவர்களின் அரசியல் என்ன? அவர்களின் பின்னணி என்ன? அவர்களின் கொள்கை என்ன? அவர்களுக்கு எங்கிருந்து பொருளாதாரம் கிடைக்கிறது என்று அறிய முற்படுங்கள்...
அவர்கள் சங்கர் படத்தில் வரும் ஹீரோயிச மனப்பான்மையில் உள்ளவர்கள். NGO என்ற அடிப்படையே அதிகாரம், முதலாளித்துவத்துக்கு அடிமைப்பணி செய்வது தான். முதலாளித்துவத்தின், அரசின் பிழைகளை மறைக்க, அவர்களுக்கு எதிராக போராடும் மக்களுக்கு குறுகியகால தீர்வை காட்டி போராட்டத்தை கட்டுப்படுத்துவதே பெரும்பாலான NGOக்களின் நோக்கம். குறிப்பாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த பலர் புகழுக்காக, சமூக அந்தஸ்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக, அமெரிக்கா செல்வதற்காக, வெற்று விருதுகளுக்காக NGOக்களில் அங்கம் வகித்து கொடி பிடிக்கின்றனர்.
ஒரு உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், தூத்துக்குடி மக்கள் எப்படி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அதே போல், நாகை, காரைக்கால் மக்கள் ONGC நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் அழிந்து மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்பது அவர்களின் புகார். இந்த எதிர்ப்பு உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு ONGC நிறுவனம் மக்களை ஏமாற்றி நன்மதிப்பை பெறுவதற்காக ஸ்டெர்லைட் பாணியில் சில சின்ன மீன்களை போட்டு பெரிய மீன்களை பிடிக்க (அதாவது சிறிய உதவிகளை செய்து பெரும் லாபம் அடைய) முன் வருகிறது. இதனை பார்த்த மக்களும் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என்ற கார்ப்பரேட் தந்திரத்தை அவர்கள் கையாள்கின்றனர்.
இதற்கு உறுதுணையாக இருப்பது ரோட்டரி சங்கம் எனப்படும் மற்றுமொரு பன்னாட்டு NGO தான். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணி என்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்பதும், அதனை வரவிடாமல் தடுப்பதும் தான். ஆனால், ரோட்டரி சங்கம் என்ற இந்த NGO, ONGC க்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்க முயற்சித்து அவர்களுடன் சேர்ந்து மருத்யுவ முகாம் நடத்தியது.
இதுபோல் ரெட் கிராஸ், லயன்ஸ் சங்கம் போன்றவையும் பன்னாட்டு நிதி, கார்ப்பரேட் நிதியுதவி, அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊருக்குள் நிலவும் மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்சனைகள் பற்றி சங்கம் சார்பில் குரல் எழுப்ப மாட்டார்கள். அரசின் மக்கள் விரோத போக்கு, பண வெறிக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் குற்றங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் இந்த 3 NGOக்களும் வல்லாதிக்க நாடுகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் ஆதரவாக போர்களால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளில் பல்வேறு ஈனச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அரசு உதவியுடன் பல ஊர்களில் கிளைகளை நிறுவியுள்ளனர். பள்ளிகளில் JRC எனப்படும் மாணவர் செஞ்சிலுவை சங்கங்களும் கட்டாயமாக அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அந்த NGOக்களின் போதனைகள் திணிக்கப்படுகின்றன. ஒரு பிரச்சனையை பாதிக்கப்பட்டவனின் பார்வையிலிருந்து பார்க்காமல், கார்ப்பரேட்டுகளின் பார்வையிலிருந்து பார்க்கும் கேவலமான ஆதிக்க மனோநிலையை உருவாக்குகின்றன. இந்த NGOக்களில் நல்லது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருப்பவர்கள், இதன் மூலம் தொழில் ரீதியாக பயனடைய வேண்டும் என நினைப்பவர்கள், அரசியல் ரீதியில் பயனடைய நினைப்பவர்கள், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல நினைப்பவர்கள், புகழ்விரும்பிகள் என பல தரப்பினர் சேர்கின்றனர். இதில் முதலில் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவரும் புகழ் விரும்பியாக மாறிவிடுகிறார். இது தான் நிதர்சனம்.
இவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நீண்ட தொலைவை உருவாக்க முயல்கின்றனர். அரசை எளிதில் நெருங்க விடாமல் மக்களை தடுக்கின்றனர். ஒரு நிரந்தர தீர்வுக்காக போராடும் மக்களிடம் உதவுவது போல் சென்று தற்காலிக தீர்வை (ஆதிக்க வர்க்கத்தினர் காட்டிய வழிபடி) சொல்லி போராட்டத்தை நீர்த்து போக செய்கின்றனர். குறிப்பாக ஒரு பகுதியில் வெள்ளத்தாலோ புயலாலோ பாதிக்கப்பட்ட குடிசைகள், வீடுகளை புணரமைக்கக் கோரி மக்கள் போராடினால் இந்த என்.ஜி.ஓக்கள் அங்கு சென்று வீடு கட்டித்தருகிறோம் என உத்தரவாதம் தருவார்கள். பாமர மக்களும் வீடு கிடைத்தால் போதும் என கலைந்து சென்றுவிடுவார்கள். ஆனால், உண்மையில் போராட்டத்தை முன்னின்று நடத்திய சிலருக்கு மட்டும் வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். போராட்டத்தை கட்டுப்படுத்தியும் விட்டார்கள், போராட தூண்டி அவர்களை சமாதானப்படுத்தியும் விட்டார்கள்.
ஒரு பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ போன்ற செயல்படுத்துவதாக இருந்தால் முதலில் கார்ப்பரேட்டுகள் அங்கு NGO-க்களை தான். இவர்கள் நல்லது செய்பவர்கள் தானே என மக்கள் நினைத்துக் கொண்டு எதையும் கேட்காமல் நம்புவார்கள். இறுதியில் அவர்கள் குடியை கெடுக்கப்போகும், திட்டங்களுக்கு காரணமானவர்களாக இவர்கள் இருப்பார்கள். அம்பானியும், அதானியும், வேதாந்தாவும் தங்கள் அழிவுத் நிறைவேற்ற அந்த பகுதிக்கு முதலில் அனுப்புவதும் இவர்களைத் தான். கடலைத் தூய்மை செய்கிறோம் என்ற பெயரில் சேவை செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக கடலை ஆய்வு செய்து அங்கு என்ன தொழில் தொடங்கலாம் என்பதை ஆராய்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு சொல்வதும் இவர்கள் வேலை தான். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த பலரும் இதுபோன்ற NGO ஒன்றால் டிரெக்கிங் அழைத்து செல்லப்பட்டவர்கள்.டிரெக்கிங் என்ற பெயரில் மலை வளத்தை ஆய்வு செய்யவே அவர்கள் இவ்வாறு சென்றதாக குற்றச்சாட்டு உண்டு. கொடைக்கானல் அருகே வட்டாக்காணலில் உள்ள இஸ்ரேலியர்கள் முகாமை அமைக்கவும் NGO உதவியுடன் தான் முதலில் ஊடுருவி உள்ளனர்.
ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம் உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை NGO ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே NGOகள் என்றாலே ஒரு நாட்டின் உளவு நிறுவன முகவர்கள் என்றாகிவிட்டது.
இலங்கையில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து, சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும் அப்படி சில தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு வன்னிக்குள் காலடி எடுத்து வைத்தனர்.
இதே காலகட்டத்தில் (2004ல்) சுனாமி வன்னியையும் தாக்கியது. அப்போது உலகத்தில் உள்ள அனைத்து NGOக்களும் வன்னிக்கு படையெடுத்தனர்.
அவர்களினூடாக வன்னிக்குள் நுழைவது உளவாளிகளுக்கு இன்னும் சுலபமானது.
இப்படி நுழைந்த NGOக்கள் தலைவர்களுடன் பழகி ரகசியங்களை கறந்து அவர்களுக்கு எதிராகவே திருப்பினர். நாட்டு மாடுகளை அழித்து ஜெர்சி மாடுகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் பீட்டா என்ற என்ஜிஓ தான். மாடுகளை காப்பாற்ற போவதாக சொல்லி அவர்கள் ஆடிய நாடகம் ஊர் அறிந்தது. இதுபோல் நதிகளை மீட்போம் எனக்கூறி ஜக்கி வாசுதேவ் ரேலி பார் ரிவர், காவிரி கூக்குரல் என்பது போன்ற நாடகங்களை தனது என்ஜிஓ மூலம் அரங்கேற்றினார். அதை வைத்து நல்லது செய்வது போல் நடித்து தனது ஆன்மீக பிரச்சாரத்துக்கும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் செயல்பாட்டுக்கும் பயன்படுத்திக்கொண்டார்.
இவர்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு அளித்தவர். இதுபோல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது ஊழலை ஒழிப்போம் எனக்கூறி போராடிய அண்ணா ஹசாரே என்ற போலி சமூக ஆர்வலர் பாஜக ஆட்சி காலத்தில் நடைபெற்றுவரும் இமாலய ஊழல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.
அவர் மூலம் அரசியலுக்கு அடியெடுத்து வைத்த அரவிந்த் கெஜ்ரிவால் நல்லவர் போல் நடித்து டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின் போதும் தப்லீக் ஜமாத் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளை போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் சங்கிகளுக்கு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தினார்.
சாலை பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்பட்டுவரும் என் ஜி ஓக்கள் பலவும் அரசின் மோசமான சாலைகள் சுங்கச்சாவடிகள் பற்றி வாய் திறக்காமல் பொதுமக்கள் மட்டுமே விபத்துக்களுக்கு காரணம் என்பதை போல் அவர்களுக்கு மட்டுமே அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோல் பெண்ணியம், பெண்களைக் காப்போம் என்ற கொள்கைகளுடன் தொடங்கப்படும் என் ஜி ஓக்கள் பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி செய்வதற்கு பயன்படுகின்றன. அரசுக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்ப தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பும் வேலைகளையும் இந்த பெண்ணியம் பேசும் என்.ஜி.ஓக்கள் மேற்கொள்கின்றன.
குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்டத்துக்கு இந்த என் ஜி ஓக்கள் பலவும் ஆதரவு தெரிவித்தன. அதில் அங்கம் வகித்து வந்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் கொள்கைகளை மறந்து அவர்களுடன் சேர்ந்து பாஜகவின் சட்டத்தை ஆதரித்தனர் என்பது வேதனையான ஒன்று.
என்.ஜி.ஓ-கள் பெரும்பாலானவற்றில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்கள் பலரும் மார்க்க கொள்கைகளை மறந்து இஸ்லாத்துக்கு எதிரான காரியங்களையும் செயல்பட துணிகின்றனர் இதற்கு முக்கிய காரணம் இந்த என்.ஜி.ஓக்களில் உள்ள பெரும்புள்ளிகளிடம் தாங்கள் பெற்று வைத்துள்ள பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற முகஸ்துதி மற்றும் அதனால் தங்களுக்கு கிடைக்கப்போகும் ஆதாயம்.
இது போல் ஒவ்வொரு என்ஜிஓ வுக்கும் ஒவ்வொரு பின்னணி முகங்கள் உள்ளன. அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தடுப்பது, எதிர்க் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஆளுங்கட்சியின் திட்டங்களை வேண்டுமென்றே எதிர்ப்பது, குறிப்பிட்ட சில கட்சிகள் தவறு செய்தால் மட்டும் விமர்சிப்பது, கார்ப்பரேட்டுகளை இறக்குமதி செய்ய உள்நாட்டு பொருட்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லி மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்வது, அரசு மருத்துவமனைகள் அரசு நிறுவனங்கள் என அனைத்தும் மோசம் என பிரச்சாரம் செய்து தனியார் மையத்துக்கு ஆதரவாக மக்களைத் திரட்டுவது, வன விலங்குகளை கொல்கிறார்கள் எனக்கூறி காட்டுவாசிகளை வனப்பகுதியில் இருந்து விரட்ட நினைப்பது, பெண்ணியம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் விமர்சிப்பது என இவர்களின் பின்னணி பலவகைகளில் அமைந்துள்ளது. இவர்களை கண்டறிந்து களையெடுப்பது அவசியம். இவர்களின் வழிகாட்டுதலின் படி சிறிய சிறிய NGOக்கள் புதிய புதிய திட்டங்களுடன் தொடங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல NGOக்கள் ஊழல் ஒழிப்பு, தூய்மை, விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரை முன் வைத்து தோற்றுவிக்கப்படுகின்றன. வெளியிலிருந்து பார்த்தால் கவர்ச்சியாக, நல்லது போல் தெரியும். ஆழமாக பார்த்தால் அவை தங்க முலாம் பூசப்பட்ட தகரங்கள் என்ற உண்மை விளங்கும்.
தொடங்கிய குறுகிய காலங்களில் அபார வளர்ச்சி. எப்படி பணம் வருகிறது என்றே தெரியாத அளவுக்கு திட்டங்கள். வாரம் ஒரு மேடை, மாதமொரு விருது, பெயர், புகழ் என அதில் இயங்குபவர்களின் மனநிலையும் முடக்கப்படுகிறது. புகழ் தான் வாழ்க்கை என்ற எண்ணம் அவர்கள் நெஞ்சில் ஆழமாக விதைக்கப்படுகின்றன. மக்கள் முன் மகா உத்தமசீலர் போல் உருவகப்படுத்தப்படும் இவர்களை அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதும் கூடுதல் தகவல். இவர்கள் அரசியல் கட்சிகளை விட மிக மோசமானவர்கள், ஆபத்தானவர்கள்.
பசியில் அழுகும் குழந்தைக்கு கிளுகிளுப்பை காட்டினால், தீர்வு கிடைத்துவிடுமா...? இந்த என்.ஜி.ஓ-க்கள் கிளுகிளுப்பையை மட்டும் தான் காட்டுவார்கள். பசியை தீர்க்கமாட்டார்கள். மாறாக இறுதியில் குழந்தையை கொன்றுவிடுவார்கள்.
குறிப்பு: NGO அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நண்பர்கள் வட்டத்தில் பணம் வசூலித்து உதவும் நல்ல மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய பதிவு இது அல்ல. ஆனால், நாம் உதவிக்கொண்டிருப்பது மட்டுமே நிரந்தர தீர்வு அல்ல. நாம் உதவுபவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து நிரந்தர உதவியை பெற்றுத்தர போராட வேண்டும்.
True Fact ... well Said . 100 % agreed.
ReplyDelete