அதிரடி மாற்றங்களுடன் மீண்டும் உதயமானது உங்கள் அதிரை பிறை

Editorial
0
அதிரை மக்களுக்காக கடந்த 2012-ம் ஆண்டு ரமலான் தலைப்பிறை அன்று சிறிய அளவில் தொடங்கப்பட்டு மக்களாகிய உங்களின் பேராதரவுடன் செயல்பட்டு வந்த அதிரை பிறை இணையதளம் 2018-ம் ஆண்டு டிசம்பர் 31 உடன் நியூசு என்ற பெயரில் மாற்றப்பட்டு www.newsu.in என்ற இணைய முகவரியுடன் அதிரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கான தளமாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த நியூசு தளம் தற்போது பல முன்னணி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்களின் பங்களிப்புடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

இருப்பினும் 7 ஆண்டுகளாக அதிரை மக்களோடு ஒன்றோடு ஒன்றாக இருந்த அதிரை பிறை தற்போது இல்லாதது மக்களுக்கும், அதை நடத்தி வந்த குழுவுக்கும் மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது.  15 மாதங்கள் கடந்துவிட்டாலும் நமதூர் மக்கள் அதிரை பிறையை மறக்கவில்லை. மீண்டும் அதிரை பிறையை தொடங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதிரையில் பிற ஊடகங்களில் வராத நமது பார்வைக்கு வரும் பல பிரச்சனைகளை அதிரை பிறையில் வெளியிட்டு வந்தோம். புதிதாக மாற்றப்பட்ட நியூசுவில் அவ்வாறு நம்மால் வெளியிட முடியாது. எனவே மீண்டும் அதிரை பிறையை தொடங்கலாம், வழக்கம்போல் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவுகளை பகிரலாம் என்ற எண்ணம் எழுந்தது. இதனால் மீண்டும் அதிரை பிறையை முடிவு செய்து பழைய குழுவை ஒருங்கிணைத்து புதிதாக சிலரை இணைத்து அதிரை பிறையை தொடங்கி இருக்கிறோம். தளத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தவுடன் எப்போதும் வரும் என காத்திருந்தவர்களுக்கு இத்தளத்தை விடையாக அளிக்கிறோம்.

புதிதாக கொண்டு வரப்படும் அதிரை பிறையில் பழைய தளம் போல் அல்லாமல் செய்திகளின் தன்மையை, எங்கள் செயல்பாடுகளின் தன்மையை மாற்றலாம் என்றும் முடிவு செய்து உள்ளோம். முன்பு போல் அதிரை பிறையில் அனைத்து செய்திகளும் வராது. கூடுதலாக பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் இனி புதிய அதிரை பிறையில் எது தவிர்க்கப்படும்...? எந்த மாதிரியான பணிகக் மேற்கொள்ளப்படும் என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

தவிர்க்கப்படுபவை:

1. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் செய்திகள் வெளியிடப்படாது.

2. லயன்ஸ், ரோட்டரி, ரெட் கிராஸ் போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் NGOக்களின் எந்த செய்திகளும் வெளியிடப்படாது.

3. பரபரப்பை ஏற்படுத்தும் விபத்து செய்திகள் வெளியிடப்படாது. விபத்துக்கு காரணமான சாலைகள், விதிமீறல்கள் பற்றி அலசப்படும்.

4. அதிராம்பட்டினத்தை கடந்து ஊருக்கு தொடர்பு இல்லாத வெளியூர்களில், வெளிநாடுகளில் நடைபெறும் எந்த நிகழ்வுகளும், செய்திகளும் வெளியிடப்படாது.

5. லாப நோக்கத்திற்காக, அரசியல் நோக்கத்திற்காக தனி நபர் துதிபாடும் ஜால்ரா பதிவுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

6. உள்ளூரில் முஹல்லாக்களால் நடத்தப்படும், மக்களுக்கு தேவையான பயனுள்ள நிகழ்ச்சிகளை தவிர்த்து வேறு எந்த செய்திகளும் வெளியிடப்படாது.

7. எம்.பி வந்தார், எம்.எல்.ஏ வந்தார், இன்னார் இன்னாருக்கு உதவினார் என்பது போன்ற விளம்பர நோக்கமுடைய தேவையற்ற செய்திகள் தவிர்க்கப்படும்.

8. இரண்டு தனி நபர்களுக்கு இடையேயான மோதல், இரண்டு கட்சிகள், இயக்கங்களுக்கு இடையேயான மோதல் பற்றிய செய்திகள், அரசியல் தலைவர்களை தூண்டிவிடும் செய்திகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

10. ஊரில் புதிது புதிதாக தோன்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உண்மை பின்னணியை ஆராயும் வரை அவர்கள் குறித்த செய்திகள் இடம்பெறாது.

செயல்படுத்த இருப்பவை:

1. மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

2. வழக்கமான பாணியில் அல்லாமல் மக்கள் நலன் சார்ந்த பொதுப்பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் நோக்கில் ஒரு ஒவ்வொரு செய்தியையும் ப்ராஜெக்ட் போல் எடுத்து செல்ல உள்ளோம்.

3. மக்கள் பிரச்சனைகள் சார்ந்து நடத்தப்படும் மக்கள் மற்றும் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

4. ஊரின் பிரச்சனைகள், தேவைகள், நடப்புகள் குறித்து அதிரை பிறையின் வழக்கமான பாணியில் கட்டுரைகள் வெளியிடப்படும்.

5. வீடு வரதட்சனை, தெரு பாகுபாடு, வெளிநாட்டு மோகம் போன்ற ஊரின் முக்கிய சாபக்கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதியப்படும்.

6. அதிரையில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் குறித்து உலமாக்கள் மூலம் மார்க்க ரீதியில் ஹதீஸ் விளக்கங்கள் வெளியிடப்படும்.

7. அதிரையில் வரும் அரசு திட்டங்களின் பின்னணியில் உள்ள ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.

8. அதிரையில் ஒவ்வொரு திட்டம் நிறைவேற்றப்படுவதற்கும், நிறைவேற்றப்படாததற்கும் பின்னணியில் உள்ள அரசியல் காரணம் குறித்து விளக்கப்படும்.

9. எதிர்கால அதிரையை செழிப்பாக்க, சிறப்பாக இன்றைய பள்ளி மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு, திறமைசார் பணி வழிகாட்டுதல் வழங்கப்படும்.

10. அதிரை பிறை தளத்தின் மூலம் ஆர்வம் உள்ள அதிரை இளைஞர்களுக்கு ஊடகத்துறை பயிற்சி வழங்கப்படும்.

அல்லாஹ்வின் உதவியுடன், உங்கள் ஆதரவுடன்...

உங்கள் மனதில் தோன்றிய ஆலோசனைகளை கமெண்டில் பகிர்ந்திடுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...