இதன் காரணமாக மே 3-ம் தேதிக்கு பிறகு பாதிப்பில்லாத பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படலாம். பெருநாள் நெருங்கும் சமயத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கலாம். கொரோனா வைரஸ் பரவல் தற்போது போல் இருந்தால் இந்த நிலை வரும்.
எனவே ஊரடங்கை தளர்த்தி பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியளித்து கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டால், உடனே பெருநாளுக்கான புத்தாடைகளை வாங்க வெளியூர்களுக்கு சென்றுவிடாதீர்கள். ஏனெனில் கொரோனா முழுவதுமாக நம்மை விட்டு விலகிச்செல்லும் வரை சமூக விலகலை கடைப்பிடித்து மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்தல் நலம். கடந்த மாதம் சிறுதுளியாக இருந்த கொரோனா தான் இன்று பெரு வெள்ளமாக மாறி இருக்கிறது. அது மீண்டும் வெள்ளமாக மாற விடாமல் தடுக்க நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பரவிய கொரோனாவை டெல்லி சென்று வந்தவர்களால் மட்டுமே பரவியது என குற்றம்சாட்டி இஸ்லாமியர்கள் மீது அரசும், ஊடகங்களும் களங்கம் கற்பித்தன. ஒருவேலை மீண்டும் மாவட்டங்களில் கொரோனா பரவினால், பெருநாளுக்கு ஆடைகள் வாங்க குவிந்த முஸ்லிம்களால் தான் கொரோனா பரவியது என காரணம் சொல்லி மீண்டும் சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பார்கள். ஊரடங்கை நீக்கி கடைகளை திறக்க சொன்ன அரசை யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.
எனவே நமது உடல் நலம் கருதியும், சமுதாயத்துக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த பெருநாளை எளிமையாக கொண்டாடுவோம். கடந்த 2 மாதங்களாக கடையை திறக்காமல் வருமானம் இன்றி தவிக்கும் உள்ளுர் வியாபாரிகளிடம் ஆடைகளை வாங்குவோம். அங்கும் மக்கள் கூட்டம் திரளாமல் டோக்கன் சிஸ்டம் மூலம் கடைக்காரர்கள் பொருட்களை விற்கலாம். உள்ளூர் வியாபாரிகளும் தங்களுக்கு கிடைத்த வருமானம் மூலம் மகிழ்ச்சியுடன் பெருநாளை கொண்டாடுவார்கள்.