அதிரையர்களே... இதுபோல் திட்டமிட்டு ஜகாத் கொடுத்து வறுமையை வீழ்த்தலாமே!

Editorial
0
ஜகாத் என்றால் வருடந்தோரும் ஒரு ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரத்திற்கு நூறு ரூபாய் நோட்டாக மாற்றி வைத்து ரமலானில் ஜகாத் கேட்டு வருவோருக்கு ஆளுக்கு நூறு ரூபாய், அல்லது 10 குடும்பங்களுக்கு சில ஆயிரங்களை பிரித்துக் கொடுத்து திருப்தி அடைகிறோம். 

உண்மையில் இஸ்லாம் வலியுறுத்திய ஜகாத் என்பது மாபெரும் பொருளாதார சீர் திருத்தம் ஆகும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை மேல் தூக்கி வறுமையற்ற நிலையை உருவாக்கும் வல்லமை கொண்டது ஜகாத். ஆனால், நாம் தற்போது முறையான திட்டமிடல் இன்றி கொடுக்கும் ஜகாத்தால் ஒரு ஆண்டு ஜகாத் பெற்றவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பெறுகிறார்கள். அப்படி என்றால் அவர்களின் வாழ்நிலை முன்னேறவில்லை என்று தானே அர்த்தம்?

முதலில் உற்றார் உறவினரின் துயர்துடைத்த பிறகு மற்றாரை ஆதரிக்கலாம். ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்கள் காக்கா, தம்பி, ராத்தா, தங்கை என அவர்களுக்குள்ளாக மஷூரா நடத்தி, குடும்பத்திலுள்ள உறவுகளை ஆதரித்துக் கொள்ளலாம். ஊரில் பல மாடி வீட்டு ஏழைகள் கடன் தொல்லையால் சிக்கித்தவித்து வாய்விட்டு கேட்க முடியாத நிலையில் உள்ளார்கள். அவர்களை தேடிப்போய் வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக வழங்கிவிட்டு வரலாம்.

ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்கள் இந்த வருடம், தங்களது குடும்பத்து உறவுகளில் மருத்துவ செலவீனங்களுக்கு போராடுவோரை தேர்ந்தெடுத்து பண உதவி செய்து காப்பாற்றலாம். இருதய நோயாளி, கிட்னி செயலிழப்பால் டயாலிஸிஸ் செய்வோர், கேன்சர் நோயுள்ளவர்கள் என உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் ஏழை உறவினர்களை தேடிப்போய் தங்களது ஜகாத் தொகைகளை கொடுத்து உதவலாம். ஸகாத் தொகை 10,000மாக இருந்தாலும் 1,00,000மாக இருந்தாலும் ஐந்து பேருக்கு பிரித்து கொடுக்காமல், ஒரே குடும்பத்துக்கு கொடுத்து பிரயோஜனமாக ஜகாத்தை பயன்படுத்தலாம்.

பிரித்துக்கொடுக்கும் போது யாருக்கும் பயனற்று போகிறது. அதிலும் கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்தியமாக வருமானம் ஈட்டியவர் கூட வறுமையில் வாடும் அவலம் நடந்தேறிக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவுகளில் நோயுற்று மருத்துவ உதவிக்காக போராடிக் கொண்டிருப்போர் யார் என கண்டறிந்து , வீட்டில் மனைவி, பெற்றோருடன் கலந்தாலோசித்து , கஷ்டப்படும் உறவினர்கள், பெற்றோரின் பால்ய நண்பர்கள் இவர்களை தேர்ந்தெடுத்து ஜகாத் கொடுத்து உதவுங்கள். 

போன மாசம் தானே கொடுத்தேன், போன வருடம் தானே கொடுத்தேன் என்கிற உள்நோக்கத்தை தவிர்த்து, உண்மையாகவே பணத்திற்காக திண்டாடுவோருக்கு உதவலாம். உங்களது தாய் வழி, தந்தை வழி, மனைவி வழி சொந்தங்களுக்கு முதலில் உதவலாம். ஜகாத் பெறுபவர்கள் அதை கண்ணிக்குறைவாக கருத வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தயங்குவீர்கள், கோபித்துக் கொள்வீர்கள் என்ற அச்சத்தின் காரணமாக கூட உங்கள் உறவினர் மனம் இருந்தும் உங்களுக்கு ஜகாத் கொடுக்காமல் போக வாய்ப்பு உள்ளது. ஜகாத் என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்று. அது கண்ணியக்குறைவானது அல்ல. இன்று ஜகாத் பெறும் நமக்கு அல்லாஹ்  கொடுத்து அடுத்த ஆண்டுகளில் நம்மை ஜகாத் கொடுக்கும் நிலைக்கு உயர்த்துவான். இன்ஷா அல்லாஹ். 

இரண்டாவதாக கஷ்டப்படும் குடும்பத்தில் இருக்கும் மனிதர்கள் நிச்சயமாக நாம் கொடுக்கும் ஜகாத் பணத்தை வீணடிக்க மாட்டார்கள், லாக்டவுன் கழிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அவர்கள் குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்ட, யூனிபார்ம் வாங்க, பாடப்புத்தகம் நோட்டுகள் வாங்க அவசியம் அந்தப்பணம் உதவும். பலருக்கு ஜகாத் கொடுத்தார் என்ற பெருமையை விட ஒரு குடும்பத்தை அல்லாஹ்வின் உதவியுடன் கஷ்டகாலத்தில் கைதூக்கிவிடுவதே சிறந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...