படிக்காதவர் கூட யூடியூப் வீடியோவை பார்த்து அதை பின்பற்றி மோசடி செய்யும் நிலை நிலவி வருகிறது. இதே போல், பிட்காயின், கிரிப்டோ கரன்சி, Pearl vine என்ற பெயரில் உலா வரும் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் பணத்தை பற்றிய அறிவே இல்லாமல் பலர் முதலீடு செய்கின்றனர். இதனை அறிமுகப்படுத்தும் முகவர்கள் சாதாரண மக்களிடம் பண ஆசையை காட்டி, கொடுப்பது போல் கொடுத்து பெரிய தொகையுடன் கம்பி நீட்டிவிடுகின்றனர். ஒரு காலத்தில் MLM, ஈமு கோழி, ஏலச்சீட்டு என்ற பெயரில் நடைபெற்று வந்த மோசடி தான் தற்போது டிஜிட்டல் கரன்சியின் மூலம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
இவ்வாறு பண முறைகேட்டில் ஈட்டுபவர்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற நினைப்பவர்கள் தங்கள் பணத்தை சினிமாவில் காட்டுவது போல் குழிதோண்டியோ, ஓடு, சுவர்களில் புதைத்தோ வைத்து இருப்பதில்லை. மாறாக சாமானியர்களின் வங்கிக்கணக்கில் அந்த பணத்தை சேமிக்கின்றனர். அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து முறைகேடான பெரும் தொகையை ஒரே நபருக்கு அனுப்பினால் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்து பலரது வங்கிக் கணக்கில் பணத்தை பிரித்து அனுப்பி ஒருவரது வங்கிக் கணக்கிற்கு கொண்டு சேர்கின்றனர்.
இதுகுறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாத மக்களிடம், உள்ளூரில் உலா வரும் மோசடி முகவர்கள் உதவி என்ற பெயரில் இதை உன் அக்கவுண்டுக்கு அனுப்பிறேன், அத நான் சொல்ற அக்கவுண்டுக்கு மாத்திவிடு என சொல்லிவிடுகின்றனர். தெரியாதவர்களிடம் குறிப்பிட்ட தொகையை தருவதாக கூறி அக்கவுண்ட் எண்ணை பெறுகின்றனர். சுவிஸ் போன்ற பண்ணாட்டு வங்கிகளில் முறைகேடாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் வாக்காளர்கள் பணம் கொடுக்கவும், கூலிப் படை, கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள், சமூக விரோத செயல்களுக்கு செலவழிக்கவும் இந்த பணம் பயன்படுத்தப் படுகிறது. எனவே இதற்கும் நீங்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்ததை போல் ஆகிவிடும்.
உதவி தானே என்று அவர் சொல்வதை கேட்டு செய்தால் ஆபத்து நமக்கு தான். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பகுதியில், வங்கி வட்டத்தில் ஒரு பெரும் தொகைக்கான பரிவர்த்தனை குறுகிய நாட்களுக்குள் நடக்கிறது என்றால் அது ரிசர்வ் வங்கி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசால் கண்காணிக்கப்படும். இதனால் உங்கால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம். நீங்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம்.
எங்கிருந்து உங்களுக்கு பணம் வந்தது, யாருக்கு நீங்கள் பணம் அனுப்பினீர்கள் என்ற விவரம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் சொல்லும் காரணத்தை ஏற்க அதிகாரிகளும் தயாராக இருக்க மாட்டார்கள். உங்களிடம் உதவி என்ற பெயரில் அக்கவுண்ட் எண்ணை மாற்றிய நபரும் உங்களுக்கு உதவ வரமாட்டார். வேறு நாட்டிருந்து சொல்லப்போனால் மேலிருந்து பணத்தை அனுப்பிய பெரும் புள்ளி பற்றி அவருக்கும் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பல படிநிலைகளை தாண்டிதே அந்த பணம் உங்களுக்கு வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு உங்களைப் போன்ற பலி ஆடுகளை பிடித்துக் கொடுப்பது தான் அவர்களது வேலை.
பணத்தை உரியவருக்கு அனுப்பிவிட்டு அந்த பெரும் புள்ளி வெளிநாட்டிலோ அல்லது உள்ளூரிலோ தனது அதிகார பலத்தை பயன்படுத்தி எந்த வழக்கும் நடவடிக்கையும் தன் மீது பாயாமல் பார்த்துக் கொள்வார். அப்படி சிக்கினாலும் மோசடி செய்து சேமித்து வைத்துள்ள பணத்தை லஞ்சமாக வாரி இறைத்து பிழைத்துக் கொள்வார். ஆனால், உதவுகிறோம் என்ற பெயரில், சிறு தொகை கிடைக்கிறது என்ற ஆசையில் ஒன்றும் தெரியாமல் வங்கிக் கணக்கை பிறருக்காக பயன்படுத்திய நீங்கள் குற்றவாளி ஆக்கப்படுவீர்கள்.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு உங்கள் மீது பாயலாம். இது மிக ஆபத்தான சட்டம். உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். இந்த சிறு தவற்றின் மூலம் உங்களை பல மோசமான அமைப்புகளுடனும் தொடர்புபடுத்தலாம். எனவே இதன் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கை உங்கள் தேவைக்காக, குடும்பத்தின் தேவைக்காக மட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் அடையாள அட்டைகளையும் மற்றவர் தேவைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். அதே போல் செல்போன் எண், வாட்ஸ் அப், மெயில், சமூக வலைதளங்கள் போன்றவற்றையும் முடிந்தவரை பிறர் பயன்படுத்தாத வகையில் வைத்துக் கொள்ளுங்கள்.
சென்னையிலிருந்து ஊருக்கு வரும்போதோ, வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு, ஊரில் இருந்து வெளிநாடு செல்லும்போது யாராவது பணம், நகை அல்லது வேறு பார்சல் கொடுத்தால் முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அல்லது அந்த பொருள் என்னவென்று உறுதிபடுத்திவிட்டு வாங்கிச் செல்லுங்கள். எக்காரணம் கொண்டும் பிறர் கொடுத்தார் என்று உங்களுக்கு தொடர்பு இல்லாத லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணத்தை ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்லாதீர்கள். இவை அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பல மோசடிப் பேர்வழிகள் ஊருக்குள் உலா வருகின்றனர். அவர்கள் தங்கள் லாபத்துக்காக உங்களை ஆபத்தில் மாட்டிவிட்டு தப்பிவிடுவார்கள்.
- நூருல் இப்னு ஜஹபர் அலி